Wednesday, January 16, 2008

பட்டம் - சிறுகதை

இருண்டிருந்த வீட்டினைப் போலவே அவள் மனமும் இருண்டிருந்தது..... விளக்கேற்ற மறந்தவளாய் தன்னையே மறந்து, தொலைபேசி அருகில் காத்திருக்கிறாள்.

பண்டிகைகள் பல வந்தும் அவை வெறும் சம்பிரதாயக் கொண்டாட்டங்களாகவே இவளுக்கு இருக்கிறது. விடிவு வருமா என ஏக்கத்துடன் செத்துப் பிழைக்கும் தமிழ்மக்கள் மத்தியில் அதுவும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?....

கூவும் சின்னஞ் சிறுசுகளின் பட்டங்களின் விண் நாதம் அவளின் நினைவலைகளை மீட்டின....... நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.. ஒரே ஒரு அழகிய ஆண் குழந்தை சந்தோஷ்.. அந்தக் குடும்பத்தின் சந்தோசமே அவன் தான் ...

வருஷம், தீபாவளி, தைப்பொங்கல் என பண்டிகைக் காலங்களில் மாமா, பாட்டி வீடு ஏன கலெக்ஷனுக்காக சந்தோஷ் புறப்பட்டு விடுவான்... தனக்கு கிடைத்தவற்றை நண்பர்களுக்கு கிடைத்தவற்றுடன் ஒப்பிட்டு பெருமைப்பட்டுக் கொள்வான்.

பள்ளிக்கூடத்தால் வந்தவுடன் குட்டிச்சைக்கிளுடன் குச்சு ஒழுங்கைகள் வழியாக குட்டிப் பையன்கள் புடை சூழ ஒரு பவனி .....

icecream வான் பாட்டுச்சத்தம் கேட்டால் போதும்… குசினிக்குள்ள அம்மா வைச்சிருக்கிற டப்பாக்குள்ள இருக்கிற காசை எடுத்துக் கொண்டு ஒழுங்கைக்கு ஓடி விடுவான்..

மார்கழி மாதம் கடைசித் தவணை பாடசாலைக் கடைசி நாள் ''அம்மா இந்த முறை தைப்பொங்கலுக்கு மூன்று பட்டம் தொடுத்தீஸ் விடப்போறன்….. பள்ளிக்கூடத்ததால வரேக்க கொக்குபட்டம் வாங்கிவருவன்'' என்று செல்லமாய்க் கெஞ்சி காசு வாங்கிக்கொண்டு விடுமுறையைக் கழிக்க என பல திட்டங்களை கூறியபடி பறந்து சென்றான்....

இன்று report குடுக்கிற நாள் வேளைக்கு பள்ளிக்கூடத்தால வந்திருக்கோணுமே என்று நினைச்சுக்கொண்டு வாசற்கதவைத் திறந்தவள் பதைபதைக்க நின்ற அயல் வீட்டுச்சிறுவனை நோக்கி..... ''எங்கையடா சந்தோஷ்'' என்று கேட்க,
"அவன் பள்ளிக்கூடத்திற்கு முன்னால இருக்கிற கடையில பட்டம் வாங்கப்போனவன் நாங்கள் அவனை விட்டு விட்டு வந்திட்டம் பிறகு அந்தப் பக்கமாய் துவக்குச் சூடு கேட்டது" தொடர்ந்து கூறிய எதுவும் காதில் விழாதவளாய் பதறியடித்து ஓடினாள்.........

மனதில் ஆயிரம் ஆயிரம் பிரார்த்தனைகள் அவனுக்கு ஒன்றும் நடந்திராது, நடந்திருக்கக்கூடாது…

''ஒரு சின்ன பெடியனுக்கு கழுத்தில காயம் பக்கத்தில் நின்ற பெரிய பெடியனைச் சுடும் போது பிழையாய்ப் பட்டிட்டுதாம் … என்றபடி புத்தகப்பையிலிருந்த இரத்தக் கறை படிந்த report ஐக் காட்டினார்கள்

Report இல்.. ''santhosh 1st rank'' அருகில், இரத்தத்தில் தோய்ந்தபடி கொக்குப் பட்டம்.......

அவனே தான்...

அலறியபடி ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்... கழுத்தில் பாய்ந்த ரவையால் I.C wardல் அவன். 1மாத கால போராட்டத்தின் பின் இடுப்பிற்குக் கீழ் உள்ள பாகங்கள் செயலிழந்தவனாய் உயிர் பிழைத்தாலும் தினமும் மருந்துகளுடன் வாழ்க்கை நடாத்தும் எட்டு வயது மகனை தகப்பனுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி விட்டு இயல்பைத் தொலைத்த எத்தனையோ தமிழ்த் தாய்களுள் ஒருத்தியாக அவளும் காத்திருக்கிறாள்... அடுத்த தைப்பொங்கலுக்காவது மகன் தன் பட்டத்தை ஏற்ற வருவானா என்ற எதிர்பார்ப்புடனும் சத்திர சிகிச்சையின் முடிவுகள் மகனை இயங்க வைக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடனும்..


- யாவும் கற்பனையல்ல…

2 comments:

கோபிநாத் said...

தெய்வமே ;(

Anonymous said...

Enna valikai?