Wednesday, January 23, 2008

செல்போன் மூலம் காசு சுட்ட வழிகள்

இப்ப யாழ்ப்பாணத்தில செல்போன் signal கிடைச்சா சாமி வரம் தந்தமாதிரி... முந்தி 2002 இல ஒரு உடன்படிக்கை அந்த இழவின்ர பெயரெல்லாம் மறந்து போச்சு. பாதையும் திறந்தார்கள். கலர் கலரா வெளிநாட்டுக்காரரும் வந்திச்சினம். கூடவே cellphone, computer, digital camera, video camera என்று பலவும் வந்தது.
cellphone ஐ வைச்சிட்டு நாங்கள் பண்ணிண கூத்திருக்கே...

Physics சோதி சேர் I.Q method என்று சிலநேரங்களில இருக்கிறதையும் குழப்பிவிடுவார்.இந்த பொடியங்களுக்கு ஒரு பழக்கம்,
உடனே கலர் காட்ட வெளிக்கிடுவாங்கள்.. அவர் எழுதினதுக்கு கீழ்
'மேலதிக விளக்கங்களுக்கு நாடவேண்டிய தொலைபேசி இலக்கம்'
என்று பக்கத்தில உள்ளவனின்ர ரெலிபோன் நம்பரை கரும்பலகையில் எழுதி விடுவார்கள்., இப்பிடித்தான் என்ர சோதரம் பக்கத்தில உள்ளவனின்ர(மோகன்) ரெலிபோன் நம்பரை கரும்பலகையில் எழுதினான். அண்டைக்கே மோகன்
''மவனே உனக்குவைக்கிறன்டா ஆப்பு '' என்று சபதம் எடுத்தான்.
மோகன் சொல்லிறதை செய்யிற பேர் வழி .

அதனால என்ர சோதரம் கவனமா இருக்க வேண்டும் என்று யாராவது ரெலிபோன் நம்பரைக் கேட்டால் இ.மி.ச , இ.போ.ச நம்பரைக் குடுத்திட்டு வருவான். நாய்க்கு மூக்கில வேர்த்த மாதிரி மோகனும் நம்பரைக் கண்டுபிடித்தான், கண்டுபிடித்தவன் சும்மா இருப்பானா.
"யோ"(பல பேற்ற கனவுக்கன்னி அவளின் ரெலிபோன் நம்பர் ஒரு பரமரகசியம்) அவளின் ரெலிபோன் நம்பரேண்டு சத்தியிடம் சோதரத்தின் ரெலிபோன் நம்பரைக் கொடுத்து பழி தீர்த்திட்டான்.
இது தெரியாம சோதரம் பெருமையா 'என்னை யாரென்று எண்ணி நீ பார்க்கிறாய்' என்ற லெவல் பாட்டு வேற.

இரவு 11 மணிக்கு இரண்டு பேரும் மேசையில் நல்ல நித்திரை (A/Lல் பழகிய நல்ல பழக்கமொன்று. என்யினியராய் வரோனும் படி படி என்று A/L படிக்கும் போதே என்யினியரிங் படிக்கிறது மாதிரி பெருமைப்படுகின்ற பெற்றோர்க்காக குறைந்தது 5மணித்தியாலம் படிக்க?????? எடுத்தமுயற்சி அது சொதப்பி குறட்டை விட்டு தூங்கிற அளவுக்கு வந்த சோகங்கதை )

message torn ..
சட்டு புட்டுண்டு இரண்டு பேரும் எழும்பிட்டம். சோதரம் போன எடுத்து பார்த்தான்(அது அவனுடைய தொலைபேசி)
.
ஒரு புன்னகை ''ஆயிரம் பரா லைட் அடிச்சமாதிரி ''.
ஓடிப்போய் dressing tableக்கு முன்னால நிண்டு வடிவாய் பார்த்தான்.

திரும்பவும் ஒரு message torn ..ஒரு புன்னகை. என்னப் பார்த்து இழக்காரமா ஒரு சிரிப்பு வேற..

'' என்னஇழவு நடக்குதுடா'' என்று கேட்க பாய்ஞ்சுவிழுந்து ஒவ்வொரு மெசேஜ்ஜாக் காட்டினான்.

''hi chellam நித்திரையோ?''

''நீ ரொம்ப வடிவு உன்னைக்காண தினமும் ரியூசன் வாசலில் காத்திருத்திருக்கிறேன்.தினமும் உன் வாங்கிலுக்கு நேராய் இருக்கதுடிக்கிறேன்''

சோதரத்திற்கு பயங்கர சொக் "பெட்டையலும் இப்படிச்செய்வாளலோ??" என கேட்க
''ஆனாலும் உன்னப்பார்த்து இதெல்லாம் ஓவர்" என ..நான் வாய்மூட..

அடுத்த message torn
"ஏய் 'யோ' ஏன்டா பதில காணேலை."


இப்பதான் இரண்டுபேருக்கும் விசயமே புரிந்தது .சோதரம் tension ஆயிட்டான்..
இரண்டுபேரும் என்னடா பண்ணலாமெண்டு மூளையைப்போட்டு அடிச்சம்.

மீள message torn....
"if u dont reply me, I'll suicide"
என்று ஒராள் மாடியிலை இருந்துகுதிக்கிற மாதிரி படமும் ஒன்று.

இரவு 12 மணி: இண்டைக்கு ஒரு முடிவுகாண்றது தான்...என்று
ஒரு sms அனுப்பினம்

"hi i wanna talk to u, but i dont have enough credit in my phone now, If u have a KIT card I can talk to u now. Send me a top up card number"

உடனே 100ரூபா பெறுமதியான இரண்டு top up card number கூடவே ஒரு நன்றியும் வந்தது.

ரெலிபோன் அதிகம் பாவிக்கிறமெண்டு போன்ல 5 ரூபா மீதியோட இனிமே
kit card ற்கு காசில்லை என்று அம்மா பேசின கடுப்பில இருந்த எங்களுக்கு பேய்ச் சந்தோசம்.

''உங்கள் கணக்கு மீதி 205 ரூபா'' என்ற அழகான பெண்குரலோட
தொலைபேசிக்கு ஒரு மூடு விழா. 4 நாளால திரும்பவும் திறப்பு விழா செய்திட்டு ரியூசனிற்கு போயிட்டம்.

காசத்தந்தவன் காத்திருந்து அடிச்சான்.
அம்மா போன எடுத்து நான் ''முரளின்ட அம்மாகதைக்கிறேன்'' என சோதரத்தின்ர பெயரை உளறிட்டா.

சத்திக்கு தலையில் மிளகாய் அரைச்சது யாரென்று விளங்கிவிட்டது ஆனாலும் பாவம் என்ன செய்வான்
காசை திருப்பிக்கேட்டால் குட்ட உடைச்சிடுவோம் என்ற பயத்திலை கப்புசிப்பு ன்னு இருக்கின்றான்.
இப்படி எக்கச்செக்கம்.(நிறைய) இருக்கு
இ.மி.ச: இலங்கை மின்சார சபை
இ.போ.ச : இலங்கை போக்குவரத்துச்சபை

Wednesday, January 16, 2008

பட்டம் - சிறுகதை

இருண்டிருந்த வீட்டினைப் போலவே அவள் மனமும் இருண்டிருந்தது..... விளக்கேற்ற மறந்தவளாய் தன்னையே மறந்து, தொலைபேசி அருகில் காத்திருக்கிறாள்.

பண்டிகைகள் பல வந்தும் அவை வெறும் சம்பிரதாயக் கொண்டாட்டங்களாகவே இவளுக்கு இருக்கிறது. விடிவு வருமா என ஏக்கத்துடன் செத்துப் பிழைக்கும் தமிழ்மக்கள் மத்தியில் அதுவும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?....

கூவும் சின்னஞ் சிறுசுகளின் பட்டங்களின் விண் நாதம் அவளின் நினைவலைகளை மீட்டின....... நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.. ஒரே ஒரு அழகிய ஆண் குழந்தை சந்தோஷ்.. அந்தக் குடும்பத்தின் சந்தோசமே அவன் தான் ...

வருஷம், தீபாவளி, தைப்பொங்கல் என பண்டிகைக் காலங்களில் மாமா, பாட்டி வீடு ஏன கலெக்ஷனுக்காக சந்தோஷ் புறப்பட்டு விடுவான்... தனக்கு கிடைத்தவற்றை நண்பர்களுக்கு கிடைத்தவற்றுடன் ஒப்பிட்டு பெருமைப்பட்டுக் கொள்வான்.

பள்ளிக்கூடத்தால் வந்தவுடன் குட்டிச்சைக்கிளுடன் குச்சு ஒழுங்கைகள் வழியாக குட்டிப் பையன்கள் புடை சூழ ஒரு பவனி .....

icecream வான் பாட்டுச்சத்தம் கேட்டால் போதும்… குசினிக்குள்ள அம்மா வைச்சிருக்கிற டப்பாக்குள்ள இருக்கிற காசை எடுத்துக் கொண்டு ஒழுங்கைக்கு ஓடி விடுவான்..

மார்கழி மாதம் கடைசித் தவணை பாடசாலைக் கடைசி நாள் ''அம்மா இந்த முறை தைப்பொங்கலுக்கு மூன்று பட்டம் தொடுத்தீஸ் விடப்போறன்….. பள்ளிக்கூடத்ததால வரேக்க கொக்குபட்டம் வாங்கிவருவன்'' என்று செல்லமாய்க் கெஞ்சி காசு வாங்கிக்கொண்டு விடுமுறையைக் கழிக்க என பல திட்டங்களை கூறியபடி பறந்து சென்றான்....

இன்று report குடுக்கிற நாள் வேளைக்கு பள்ளிக்கூடத்தால வந்திருக்கோணுமே என்று நினைச்சுக்கொண்டு வாசற்கதவைத் திறந்தவள் பதைபதைக்க நின்ற அயல் வீட்டுச்சிறுவனை நோக்கி..... ''எங்கையடா சந்தோஷ்'' என்று கேட்க,
"அவன் பள்ளிக்கூடத்திற்கு முன்னால இருக்கிற கடையில பட்டம் வாங்கப்போனவன் நாங்கள் அவனை விட்டு விட்டு வந்திட்டம் பிறகு அந்தப் பக்கமாய் துவக்குச் சூடு கேட்டது" தொடர்ந்து கூறிய எதுவும் காதில் விழாதவளாய் பதறியடித்து ஓடினாள்.........

மனதில் ஆயிரம் ஆயிரம் பிரார்த்தனைகள் அவனுக்கு ஒன்றும் நடந்திராது, நடந்திருக்கக்கூடாது…

''ஒரு சின்ன பெடியனுக்கு கழுத்தில காயம் பக்கத்தில் நின்ற பெரிய பெடியனைச் சுடும் போது பிழையாய்ப் பட்டிட்டுதாம் … என்றபடி புத்தகப்பையிலிருந்த இரத்தக் கறை படிந்த report ஐக் காட்டினார்கள்

Report இல்.. ''santhosh 1st rank'' அருகில், இரத்தத்தில் தோய்ந்தபடி கொக்குப் பட்டம்.......

அவனே தான்...

அலறியபடி ஆஸ்பத்திரிக்குச் சென்றாள்... கழுத்தில் பாய்ந்த ரவையால் I.C wardல் அவன். 1மாத கால போராட்டத்தின் பின் இடுப்பிற்குக் கீழ் உள்ள பாகங்கள் செயலிழந்தவனாய் உயிர் பிழைத்தாலும் தினமும் மருந்துகளுடன் வாழ்க்கை நடாத்தும் எட்டு வயது மகனை தகப்பனுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி விட்டு இயல்பைத் தொலைத்த எத்தனையோ தமிழ்த் தாய்களுள் ஒருத்தியாக அவளும் காத்திருக்கிறாள்... அடுத்த தைப்பொங்கலுக்காவது மகன் தன் பட்டத்தை ஏற்ற வருவானா என்ற எதிர்பார்ப்புடனும் சத்திர சிகிச்சையின் முடிவுகள் மகனை இயங்க வைக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடனும்..


- யாவும் கற்பனையல்ல…

Tuesday, January 8, 2008

அடம்பன் பூ...

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.. நாம் அடிக்கடி பாவிக்கும் பழமொழி... கண்ணால் பார்த்திராதலே அடம்பன் கொடி என்றால் என்ன என்று தெரிந்திராமலே பாவிக்கும் பழமொழி...

என்னைப் போல் அறிந்திராதவர்களுக்கு அடம்பன் பூ...

மாறுமோ இதுவும்?.......

அதிகாலையில் எழும்பி அவசர அவசரமாய் வெளிக்கிட்டு முதன்முதலாய் Plane ஏறப்போறன் என்ற சந்தோசத்தில் வந்த எனக்கு பழகிப்போன 1வது 2வது 3வது என சோதனைச்சாவடிகளும் எரிச்சலூட்டின. பல மணி நேர காத்திருப்பின் பின் குறித்த விமானசேவைக்குரிய பஸ் "திருவாரூர்த் தேர்" மாதிரி வந்தது. மீண்டும் அதே பல்லவி... பல சோதனைகளையும் கடந்து சாதனை படைத்த சந்தோசக் களைப்புடன் இருந்தவர்களுக்கெல்லாம் இன்னொரு இலவச இணைப்பு போல இலவசமாக போட்டோவும் எடுக்கப்பட்டு சந்திரமண்டலத்திற்குச' செல்வது போல ஒரு மாதிரி கொழும்பு வந்து சேர்ந்தாச்சு.

அவர்கள் கிரிக்கெட் பார்ப்பதற்காய் இலங்கை கிரிக்கட் விளையாடும் நாட்களில் மட்டும் ஒழுங்காய் கிடைக்கும் 24 மணிநேர மின்சாரம் மற்றைய நாட்களில் அடிக்கடி வந்து மின்னி விட்டுச்செல்லும். இரவு 6 மணிக்கே படலையைப் பூட்டி 8 மணிக்கெல்லாம் வீட்டுக் கதவையும் பூட்டி விட்டு பயந்தபடி வாழ்ந்த நான் கொழும்பு வந்ததும் ஏங்கி விட்டேன், திறந்தவெளிச்சிறைச்சாலையிலிருந்து தூக்கி ஒரு வேற்று உலகத்தில் விட்டமாதிரி...

1ம் திகதி ஒரே வெடிசத்தம்......நான் கட்டிலுக்கு கீழே போக வெளிக்கிட வீட்டில இருந்தவர்கள் கேட்டிச்சினம் என்ன ஊர் ஞாபகம் வந்திட்டுதோ எண்டு... அவங்கள் NEWYEAR க்கு வெடிக்கிறாங்கள்.. பயப்பிட வேண்டாம் என்று.. எனக்கு சீ எண்டு போச்சு....பிறகு ஒரு மாதிரி கட்டிலுக்கு கீழ என்னவோ ஓடின மாதிரிக் கிடந்ததெண்டு சொல்லி சமாளிச்சிட்டன். பிறகு Police report எடுக்கோணுமாம் என்று வீதிக்கு வந்தால் விசில் அடிச்சிட்டான். அடக்கடவுளே இனி 1 மணித்தியாலம் அல்லது 2 மணித்தியாலத்தில தான் விடப் போறான், இவளுக்கேதும் உள்பாதை தெரியுமோ என்று எண்ணியபடி தோழியைப் பார்த்தால் அவள் சிரிச்சுக்கொண்டு அது traffic ற்கு ஊதுகிறான் என்றாள். சரி Shopping போவமென;று வெளிக்கிட்டு ஒரு மாதிரியா இரவு 8 மணிக்கு எல்லாம் முடிச்சு வெளிக்கிட்டா திகைச்சிட்டன். எங்கட ஊர் கோயில் திருவிழாவில் கூட இப்படி light ஐ கண்டது இல்லை

என்ன ஒன்று மட்டும் மாறேல்லை... எங்க போனாலும் கூடவே பிறந்தது போல அடையாள அட்டை மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...

Friday, January 4, 2008

அறிமுகம்...

வணக்கம்..
யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை ஒரு சில தடைவைகள் கணனி பாவித்திருந்தாலும் பரீட்சை முடிவுகள் பார்ப்பது தவிர வேறு எதற்கும் இணையப்பாவனை இல்லாதிருந்த நான் இப்போது முழு நேர இணையத் தொடர்பில் வலைப்பதிவு பற்றி அறியத் தொடங்கிய பின் வலைபதிக்கும் ஆவலுடன் என்னையும் வலைப்பதிவுலகத்தில் அங்கீகரிப்பீர்களென்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை ஆரம்பித்திருக்கிறேன்...